அன்னூரில் அதிகரிக்கும் தொற்று கடை, ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு

அன்னூர் :  கோவை அன்னூர் ஒன்றியத்தில் கடந்த ஒருவாரமாக தினசரி 50 பேருக்கு  கொரோனா உறுதியாகி வருகிறது. இதில் 20 சதவீதம் பேர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 80 சதவீதம் பேருக்கு உரிய மாத்திரைகள், அறிவுரை வழங்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து சுகாதாரத் துறை, போலீசார் மற்றும் வருவாய்த்துறை சார்பில், அன்னூரில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டது. அன்னூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், இனியராஜ், ராயப்பன் ஆகியோர் அன்னூர் கைகாட்டியில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

ஓட்டல், பேக்கரி ஆகிய இடங்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் போடப்பட்டுள்ளதா? சமூக இடைவெளி பின்பற்றப்படடுகிறதா? நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தடுப்பூசி போட்டு உள்ளனரா? என சோதனை செய்தனர். அபராதம் விதித்த சில நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அபராதம் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் நிறுவனத்தினர் அபராதத்தை செலுத்தினர்.

இரண்டாவது முறை இதே தவறு செய்தால் அபராதம் கூடுதலாக வசூலிக்கப்படும். சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இத்துடன் போலீஸ் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வர்த்தக நிறுவனங்களின் நுழைவாயிலில் கண்டிப்பாக சானிடைசர் வைக்கவேண்டும். நிறுவனங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிந்துள்ளனரா? என ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டுமென்று சுகாதாரத்துறையினர் நிறுவன ஊழியர்களிடம் அறிவுறுத்தினர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: