பாரிக்கர் மகன் உத்பால் பாஜ.வில் இருந்து விலகல்.: பனாஜியில் சுயேச்சையாக போட்டி

பனாஜி: கோவாவில் பாஜ ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 3 முறை முதல்வராக இருந்தவரும், பாஜ.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய மனோகர் பாரிக்கர் கடந்த 2019ம் ஆண்டு இறந்தார். அவருக்கு பிறகு இம்மாநில முதல்வராக  பிரமோத் சாவந்த் பொறுப்பு ஏற்றார்.  40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ  நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரின் பெயர் இடம் பெறவில்லை.  இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு 2019ல் நடந்த பனாஜி தொகுதி இடைதேர்தலில் உத்பால் சீட் கேட்டார்.

ஆனால், சித்தார்த் கொன்கோலியன்கர் என்பவருக்கு பாஜ வாய்ப்பு வழங்கியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  அட்னாசியோ மான்செராட்டேயிடம் இவர் தோற்றார். பின்னர், அட்னாசியோ உள்பட 9 எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் இணைந்தனர். தற்போதும், பனாஜியில் அட்னாசியோவுக்கு தான் பாஜ சீட் வழங்கியுள்ளது. உத்பாலுக்கு வேறு 2 இடங்களில் போட்டியிட பாஜ அளித்த வாய்ப்பை அவர் நிராகரித்தார். இந்நிலையில், பாஜ.வில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்த உத்பால், பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும்  கூறியுள்ளார். அவருக்கு ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என தெரிகிறது.

Related Stories: