சட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 9 பேர் மீது 3 பிரிவில் வழக்கு: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

சென்னை:   வியாசர்பாடி புது நகரை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (21). சட்டக் கல்லூரியில் பயின்று வரும் இவர், பகுதி நேரமாக மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் அப்துல் ரஹீம் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கொடுங்கையூர் போலீசார், முகக்கவசம் அணியாமல் சென்ற அப்துல் ரஹீமை தடுத்து நிறுத்தி, எச்சரித்துள்ளனர்.  அப்போது அப்துல் ரஹீமுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்துல் ரஹீமை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், இரவு முழுவதும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், பணியில் இருந்த காவலர் உத்திரகுமாரை தாக்கியதாக அப்துல் ரஹீம் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அப்துல் ரஹீம் தரப்பில் இதுபற்றி புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முதல்கட்டமாக கொடுங்கையூர் தலைமை காவலர் பூமிநாதன் மற்றும் காவலர் உத்தரகுமார் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  மற்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்ஸ்பெக்டர் நசீமா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

 இந்நிலையில், அப்துல் ரஹீம் தரப்பில் நேற்று மீண்டும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவத்தன்று பணியிலிருந்த எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் நசீமா, காவலர்கள் உத்திரகுமார், பூமிநாதன், ஹேமநாதன், சத்யராஜ், ராமலிங்கம், அந்தோணி மற்றும் இரண்டு நபர்கள் மீது, அநாகரீகமாக பேசுதல், காயம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொடுங்கையூரில் அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளார். சட்டக் கல்லூரி மாணவனை தாக்கிய விவகாரத்தில் போலீசார் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களே விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது, என்ற நோக்கத்தில்  வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த 9 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மனித உரிமை ஆணையம்: இந்த விவகாரம்  தொடர்பாக, பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித  உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும்  இதுதொடர்பாக உள்துறை செயலாளர் ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு  கேமரா பதிவுகளை பாதுகாக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: