கேரளாவில் மாவட்டங்கள் ஏ, பி, சி என்று 3 ஆக பிரிப்பு: முழு ஊரடங்குக்கு இணையாக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுப்பாடு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் புதிய உச்சத்ைத எட்டி இருக்கிறது. ஆகவே இன்று முதல் மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அனைத்து மாவட்டங்களில் வரும் 2 ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. கேரளாவில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. நேற்று 1,15,357 பேருக்கு பரிசோதனை நடந்தது. இதில் 46,387 பேருக்கு தொற்று உறுதியானது. கேரளாவில் 46 ஆயிரத்திற்கு மேல் தொற்று பரவியது இதுவே முதல் முறையாகும்.

நேற்று தொற்று சதவீதம் 40.21 ஆகும். கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டியதை தொடர்ந்து இன்று முதல் கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வரும் 23, 30 ஆகிய 2 ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியே செல்ல முடியும். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. தற்போது  அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் பினராயி விஜயன் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்பட  உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 23, 30 ஆகிய 2 ஞாயிற்று கிழமைகளில் கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் நிபந்தனைகளுடன் மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். 10, 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் நேரடியாகவும், ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படும். தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிப்படுவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ, பி, சி என்று 3 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள மாவட்டங்களில் அரசியல், மதம், கலாச்சார நிகழ்ச்சிகள், திருமணம், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ‘பி‘ பிரிவில் உள்ள மாவட்டங்களில் அரசியல், மதம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ‘சி’ பிரிவில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போதைய கணக்கின்படி ‘சி’ பிரிவில்  எந்த மாவட்டமும் வரவில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்போதைய நிலவரப்படி கொரோனா கட்டுப்பாடு மாவட்டங்கள் பிரிக்கப்படும். ஆனால் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்குக்கு இணையாக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் தொடரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: