விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதம்: வடமாநில டிரைவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்தது தொடர்பாக வடமாநில டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  புதுச்சேரியிலிருந்து நேற்றிரவு மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு டயர்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி சென்றது. மகாராஷ்டிரா மாநிலம் அமித் நகரைச் சேர்ந்த மச்சின்ரா செபல் (53) லாரியை ஓட்டி சென்றார். புதுச்சேரியில் இருந்து வந்த லாரி கோலியனூர் கூட்டுரோடு வழியாக சென்னை சாலையில் செல்லாமல் நேராக விழுப்புரம் நகரப்பகுதிக்கு சென்றுள்ளது. மொழி தெரியாத டிரைவர் கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்னை சாலையை அடைய வழி தேடியுள்ளார். அப்போது, விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து வலது புறம் திரும்பி திருவிக சாலை வழியாக, பெரியார் சிலை அருகே வந்து இடது புறம் திரும்பி சென்னை சாலையை அடைய முயற்சி செய்துள்ளார். அப்போது, கன்டெய்னர் லாரியின் ஒரு பகுதி பெரியார் சிலையின் மீது பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது.

நள்ளிரவில் பெரியார் சிலை உடைந்ததையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி நாதா மற்றும் டிஎஸ்பி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உடைந்த சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்று தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர். இதற்கிடையே பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக நகர தலைவர் சர்க்கரை தலைமையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் மச்சின்ரா செபலை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: