முகக்கவசம் அணியவில்லை என மாணவர் மீதான தாக்குதல் - 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் முகக்கவசம் அணியவில்லை என சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் பூமிநாதன், காவலர் ருத்ரகுமாரனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் பொதுஇடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு கூறி இருக்கிறது. அந்த வகையில் சென்னை கொடுங்கையூரில் முகக்கவசம் அணியவில்லை என சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம். இவர் கடந்த 13ஆம் தேதி கொடுங்கையூர் எம்.ஆர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் முகக்கவசம் அணியாமல் சென்றதால் அபராதம் கட்டச்சொல்லி ரோந்து பணியில் இருந்த போலீசார் ருத்ரகுமாரன், பூமிநாதன் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த சட்டக்கல்லூரி மாணவர்மற்றொரு புகார் மனுவை அளித்திருந்தார். தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட பிறகு வழக்குப்பிரிவுகள் மாற்றப்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்கு பிறகு தற்போது தலைமை காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் ருத்ரகுமாரன் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல காவல் ஆய்வாளர்கள் நசீமா, ராஜன் எழுத்தர் ஹேமநாதன் ஆகிய 3 பேருக்கும் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: