தமிழகத்தில் தடுப்பூசி திட்டம் வெற்றி கொரோனா தடுப்பூசியை ஓராண்டில் 88% பேர் செலுத்தி கொண்டனர்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு ஒன்றிய அரசு, முதல்வர், அமைச்சர், செயலாளர், அரசியல் கட்சி தலைவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழத்தில் 5.13 கோடி பேர் (88%) முதல் தவணையும், 3.71 கோடி பேர் (62%) 2 தவணையும் செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் 25 லட்சம் குழந்தைகள் (75%) மற்றும் 81 ஆயிரம் பேர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய முதல் 103 நாட்களில் தினசரி சராசரியாக 61,441 டோஸ் மட்டும் செலுத்தப்பட்டது.

அடுத்த 249 நாட்களில் தினசரி சராசரியாக 3.28 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களும், 17 மாவட்டங்களில் 80 முதல் 90 சதவீத பேரும், 8 மாவட்டங்களில் 70 முதல் 80 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதிகம் பேர் 2 தவணையும் செலுத்தி கொண்ட மாவட்டங்களில் கோவை, நீலகிரி முன்னிலையில் உள்ளது. இந்த மாவட்டங்களில் 80 சதவீத பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 7 மாவட்டங்கள் 70 முதல் 80 சதவீத பேரும், 16 மாவட்டங்களில் 60 முதல் 70 சதவீத பேரும், 13 மாவட்டங்களில் 60 முதல் 50 சதவீத பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Related Stories: