வேட்புமனு தாக்கலில் விபரங்களை மறைப்பு: ஓ.பன்னீர்செல்வத்திடம் விரைவில் விசாரணை

தேனி: வேட்புமனு தாக்கலில் விபரங்களை மறைத்த வழக்கில் ஓபிஎஸ்சிடம் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தொடர்பாக போலீசார் எஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் அவரது மகன் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் தேர்தலின்போது வேட்புமனுத்தாக்கலில் விவரங்களை மறைத்த புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ஏயின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார்தாரரான மிலானியிடம் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர்.

இவ்வழக்கு விசாரணை இறுதி அறிக்கை பிப். 7ம் தேதிக்குள் தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து எஸ்பி உமேஷ் பிரவீன் டோங்கரே, குற்றப்பிரிவு டிஎஸ்பி சுந்தர்ராஜ் ஆகியோர் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் இருப்பதால் சம்மனை எடுத்துச் சென்று நேரில் விசாரிப்பதா அல்லது சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்பதா என ஆலோசித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories: