ஆவடி அருகே சிக்னல் வயர்கள் துண்டிப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை பாதிப்பு

ஆவடி: சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்கள் என நூற்றுக்கணக்கான ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சரக்கு ரயில்கள் இந்த தடத்தில்தான் சென்று வருகின்றன. இதனால், இந்த ரயில் மார்க்கம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது, அந்த பகுதியில் ரயில்களுக்கு முறையாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

பின்னர், இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆவடி ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்குள்ள சிக்னல் கம்பம் மற்றும் வயர்களை சோதனையிட்டனர். அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதைக்கான சிக்னல் வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்ததும், இதனால்,  எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முறையாக சிக்னல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை உரிய நேரத்தில் ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே, ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட சிக்னல் வயர்களை சீரமைத்தனர். அதன்பிறகு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை சென்றன. சிக்னல் வயர் துண்டிப்பு காரணமாக அரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அண்ணனுர் ரயில்வே பாதுகாப்பு படையினர்  சிக்னல் வயர்கள் எப்படி அறுந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: