தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பக்தர்களுக்கு உணவை பொட்டலங்களாக வழங்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானத்தை உணவு பொட்டலங்களில் வழங்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் உள்பட பல கோயில்களில் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படும் நாட்களில் அன்னதானத்தை உணவு பொட்டலங்களில் விநியோகிக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படும் நாட்களில் அன்னதானத்தை உணவு பொட்டலங்களில் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவற்றை உணவு பொட்டலங்களாக பார்சல் செய்து வழங்கி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: