பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புகின்றனர்: பைக்குகளில் வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பஸ், ரயில், கார் மற்றும் பைக்குகளில் குடும்பம், குடும்பமாக சென்றனர். இதனால் வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாட்டம் முடிந்ததும் இன்று முதல் சென்னைக்கு மக்கள் மீண்டும் திரும்பி வருகின்றனர். நாளை தைப்பூச விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் நாளைமுதல் சென்னைக்கு வரவுள்ளதால் இன்று குறைந்தளவே வாகனங்கள்தான் வருகின்றன. ஆனால் பைக்குகளில் குடும்பத்துடன் வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் பைக்குகளில் எண்ணிக்கைத்தான் அதிகமாக காணப்படுகிறது.

இருப்பினும் செங்கல்பட்டு ஏஎஸ்பி அசிஸ் பச்சோரோ தலைமையில் போலீசார், பரனூர் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில்,‘‘நாளை தைப்பூச விடுமுறை என்பதால் சென்னைக்கு மக்களின் வருகை குறைவாக உள்ளது. ஆனால் நாளை முதல் அதிக மக்கள் வரும்போது பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: