2 தவணை தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா வைரஸ் தாக்கினால் இணைநோய் உள்ளவர்களுக்கே ஆபத்து

* இறந்த 191 பேரில் 181 பேருக்கு இணை நோய்

* பொது சுகாதாரத் துறை இயக்குனர் தகவல்

சென்னை : இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தாக்கினாலும் இணை நோய் உள்ளவர்களுக்கே ஆபத்து அதிகம் உள்ளதாக டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது: கடந்த 1ம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 191 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 163 பேர் (85.3%) 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 191 பேரில் 94.7% பேர் அதாவது 181 பேருக்கு இணை நோய்கள் பாதிப்பு இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை உயிரிழந்த 191 பேரில் இணை நோய்களுடன் இருந்த 159 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டவர்கள் என 131 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதில் அதிக இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 62% முதியவர்கள் முதல் தவணையும், 48% முதியவர்கள் 2வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இணை நோய் பாதிப்பு உள்ள முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே வீட்டில் உள்ள முதியவர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க விரைவாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும். மேலும் அவர்களுக்கு இணை நோய் இருந்தால் அதற்கு தேவையான மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டு அந்த நோயின் பாதிப்பை கட்டுக்குள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: