சென்னை பட்டினப்பாக்கம், லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை : சென்னை பட்டினப்பாக்கம், லூப் சாலையில் ரூ.9.97  கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது,  மீனவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ரூ.10.75  கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என். நேரு அறிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 125 பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுரங்களிலும்   மீன் அங்காடிகள்  செயல்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் குறிப்பாக வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்  பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ரூ.9.97  கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்க அரசின் நிர்வாக அனுமதி கோரி  விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 125 பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.9.97  கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஒப்பங்கள் கோரப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கப்படும் எனவும்,  இந்த நவீன மீன் அங்காடியில் சுற்று சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள்,  மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள்,  இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (Effluent Treatment Plant), 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில்  வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும்  ஏற்படுத்தப்பட உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Related Stories: