தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு: மு. மீனாட்சி சுந்தரம், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருதிற்கு தேர்வு

சென்னை: 2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு மு. மீனாட்சி சுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் நெறி பரப்பியும், திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்துவருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை திறக்கப்படுவதற்கு முதன்மையாக இருந்தவர்களில் மீனாட்சி சுந்தரமும் ஒருவர். இவர் பெங்களூருவில் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மு.  மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு தமிழக அரசு அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.         

அதேபோல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், நீண்ட காலமாக காமராஜருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளை கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதினை வழங்குகிறது. விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக தலா ரூ.1 லட்சம் ரொக்கமும் மற்றும் 1 சவரன் தங்கபதக்கமும் வழங்கப்படவிருக்கிறது.

Related Stories: