பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு சென்றபோது கார் தீப்பற்றி எரிந்ததில் அண்ணன், தம்பி பலி

சென்னை: குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் குமார் (48). இவர், பொங்கல் பண்டிகை கொண்டாட, மகள் தன்யாஸ்ரீ (14), தம்பி வெங்கடவரதன் (45)  ஆகியோருடன் சொந்த ஊரான திருச்சி மாவட்டம், குளத்தூருக்கு வாடகை காரில் நேற்று முன்தினம்  இரவு புறப்பட்டார். காரை கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவம், பெரிய மாம்பட்டுவை சேர்ந்த விஸ்வநாதன் (27) ஓட்டினார்.  நேற்று அதிகாலை 4 மணியளவில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் தார் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் டீசல் டேங்க் மீது மோதியது. இதில் டீசல் டேங்க் வெடித்ததால் கார், சாலையின் சென்டர் மீடியனில் ஏறி நின்றபடி தீப்பிடித்தது.

 அப்பகுதியினர் ஓடி வந்து காருக்குள் இருந்த 4 பேரையும் மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். இதில் குமார், வெங்கடவரதன் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். லாரியை ஓட்டி வந்த செங்கல்பட்டு மாவட்டம்  செய்யூர் தாலுகா, திருவாத்தூர் பின்னகண்டை கிராமத்தை சேர்ந்த குமார் (39) கீழே குதித்து தப்பினார். தகவலறிந்து வந்த பாடாலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு படையினர், விஸ்வநாதன், தன்யாஸ்ரீ ஆகியோரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி  வரை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: