டெல்டா வைரசுக்கு 25-30% சிகிச்சை தேவைப்பட்டது ஒமிக்ரானுக்கு 5 முதல் 10% வரை மட்டுமே சிகிச்சை தேவைப்படுகிறது: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி உடனிருந்தார். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. ஒமிக்ரான் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக பரவும் நிலை இருப்பதாலும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

வரும் நாட்கள் தமிழகத்துக்கு மிக முக்கியமானதாகும். எனவே தமிழக மக்கள் அடுத்த சில நாட்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக இருப்பதை தவிர்ப்பதாலும், முகக்கவசத்தை முறையாக அணிவதாலும் கொரோனா பரவலின் தீவிர தன்மை குறையும். தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தளவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது அலையை எதிர்கொள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழக மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு சதவீதம் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏதாவது ஒரு மருத்துவமனையில் படுக்கை இல்லை என்பதை அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை நிரம்பி விட்டதாக கருத வேண்டாம். தற்போது 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளது. கூடுதலாக கொரோனா தடுப்பூசி வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். டெல்டா வைரஸ் பாதிப்பின் போது பாதிக்கப்பட்டவர்களில் 25 முதல் 30 சதவீதத்தினருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வசதி தேவைப்பட்டது. ஒமிக்ரான் பாதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை தான் மருத்துவமனையில் சிகிச்சை வசதி தேவைப்படுகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: