தமிழகத்தில் இந்தாண்டு முதன்முதலாக புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம்: இன்று அவனியாபுரத்தில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நேற்று நடந்தது. மதுரை அவனியாபுரத்தில் இன்றும், நாளை பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். கொரோனா அச்சுறுத்தும் நிலையிலும் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிகட்டு நடத்தப்படுகிறது. இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி  ஊராட்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில்  நேற்று காலை கோலாகலமாக நடந்தது.  இந்த  ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்  ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில்  தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள்  பங்கு பெற்றன. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான உறுதிமொழியை மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு வாசித்தார். மாடுபிடி வீரர்கள் 400 பேர் உறுதிமொழி  ஏற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து 290 பேருக்கு  தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் வாடி  வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து  விடப்பட்டது. இதில் ஏராளமான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல்  சீறிப்பாய்ந்து சென்றன. காளைகளை அடக்க முயன்ற 53 வீரர்கள் காயமடைந்தனர். காளைகளை பிடித்த  வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின்  உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு, கட்டில், சேர், குடம் போன்ற  பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

அவனியாபுரத்தில்: மதுரை அருகே அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. இம்முறை ஜல்லிக்கட்டை மதுரை மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. பார்வையாளர்கள் 150 பேருக்கும், 300 மாடுபிடி வீரர்களுக்கும், 700 காளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைக்கிறார். மதுரை மாவட்டத்தின் 2வது ஜல்லிக்கட்டு நாளை பாலமேடு, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் திங்களன்று (ஜன.17) நடைபெறுகிறது.

Related Stories: