கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனாவை தடுக்க எடுக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த மாநில முதல்வர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்றின் உக்கிரம் குறைந்து வந்த நிலையில், அதன் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இது தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்றுகாலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று ஒரே நாளில், 236 நாட்களுக்கு பிறகு, 2,47,417 பேர் புதிதாக தொற்றினால் பாதித்துள்ளனர். இதனால், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 5,488 பேருடன் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோயுடைய 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா  தொற்று அதிகரித்து வருவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு அந்தந்த மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சகம், மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இயக்கமாக மாற்ற வேண்டும்.  ஏனெனில், தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் மிகச் சிறந்த  ஆயுதமாகும்’ என்றார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ‘நாட்டில் 92 சதவீத இளைஞர்களுக்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். 2வது கட்ட தடுப்பூசி வழங்குவதும் 70 சதவீதத்தை எட்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை மற்றும் கூட்டு அணுகுமுறை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.  நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள், முன்களப் பணியாளர்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதார கட்டமைப்பு வலுப்பெறுகிறது. தடுப்பூசி போடும் திட்டத்தை 100 சதவீதம் எட்டுவதற்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

நாட்டில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 10 நாட்களில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் உலகளவில் தங்களின் சிறப்பை நிரூபித்து வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான உத்திகளை வரையறுக்கும் போது, பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை பாதுகாப்பது மிக முக்கியமாக உறுதிபடுத்தப்பட வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, சாதாரண மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார நடவடிக்கைகளுக்கு சிறிதளவு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

மாவட்ட அளவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் தங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் கொரோனா தொற்றில் இருந்து வெற்றியுடன் விடுபடுவோம். ஒமிக்ரான் குறித்து முன்பு நிலவிய சந்தேகங்கள் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு முந்தைய உருமாறிய வைரஸ்களை விட மரபணு மாறிய ஒமிக்ரான் பல மடங்கு மிக வேகமாக பரவுகிறது.

எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். அதே நேரம் ஒமிக்ரான் குறித்து பீதி அடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பண்டிகை காலத்தில், மக்களின் விழிப்புணர்வு, மாநில அரசுகளின் நிர்வாக செயல்பாடுகளில் எந்த குறைபாடும் இருக்க கூடாது.’

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: