பிரதமர் பாதுகாப்பு குளறுபடி: ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்  அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கடந்த 5ம் தேதி பிரதமர் பயணம் மேற்கொண்டார். ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்தது. மேலும் இதுதொடர்பாக ஒன்றியம் மற்றும் பஞ்சாப் அரசு அமைத்துள்ள விசாரணை குழுவுக்கும் இடைக்கால தடை விதித்து கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஐந்து பேர் கொண்ட குழுவின் விவரங்களை உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா இந்த குழுவின் தலைவராக செயல்படுவார் என்றும்,  மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் டிஜி அல்லது அவர் நியமனம் செய்யக்கூடிய ஐஜி பதவிக்கு கீழ் இல்லாத அதிகாரி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர்கள், பஞ்சாப், சண்டிகர் மாநில  டிஜிபிக்கள், குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 5 பேர் கொண்ட குழு பிரதமர்  பாதுகாப்பு குளறுபடி குறித்து இன்று முதல் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories: