ஆம்பூரில் பி.எப்., போனஸ் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை-தீர்வு ஏற்படாததால் திரும்பி சென்றனர்

ஆம்பூர் : போனஸ் மற்றும் பி.எப். தொகையை வழங்கக்கோரி ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் பணி செய்யாமல் தொழிலாளர்கள் திரும்பி சென்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் பல்வேறு வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். 162 பேர் தூய்மை பணியாளர்களாகவும், டெங்கு கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்களாக 82 பேரும் மற்றும் ஒப்பந்த வாகன ஓட்டுனர்கள் என 259 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன் குவிந்தனர். அப்போது அவர்கள், தங்களுக்கு பொங்கல் போனஸ் தொகை, பி.எப்., தொகை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையாளர் சகிலா தலைமையில் துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஒப்பந்ததார் மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், தொழிலாளர்களின் ஒரு சில கோரிக்ககைளை ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சில கோரிக்கைகள் ஏற்கபடாததால் தீர்வு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. இதுகுறித்து நாளை(இன்று) மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் நாளை(இன்று) வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: