பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடிகர் சோனுசூட் சகோதரி மோகா தொகுதியில் போட்டி: முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தகவல்

சண்டிகர்: பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டின் சகோதரி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மோகா தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார். கடந்த 2020ம்  ஆண்டு கொரோனா பெருந்தொற்றினால், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது  மும்பையில் வசித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பஸ்களில் அவர்களுடைய ஊர்களுக்கு சோனு சூட் அனுப்பி வைத்தார். இது அவருக்கு தேசிய அளவில் புகழை தேடித்தந்தது.  பல்வேறு சமூக சேவைகளையும் செய்துள்ள, சோனுவின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி முன்னிலையில் நேற்று காங்கிரசில்  சேர்ந்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்  பேசிய சரன்ஜித் சிங் சன்னி, ‘சட்டசபை தேர்தலில் மோகா தொகுதியில் மால்விகா வேட்பாளராக நிறுத்தப்படுவார்’ என்றார்.  இந்திய தேர்தல் ஆணையம் சோனு சூட்டை  ‘ஐகான் ஆப் பஞ்சாப்  (பஞ்சாபின் அடையாள சின்னம்) என்ற அந்தஸ்து வழங்கியது. சோனுவின் சகோதரி காங்கிரசில் சேரப்போகிறார் என்ற செய்திகள் வெளியானதையடுத்து  அவருக்கு வழங்கிய ஐகான் ஆப் பஞ்சாப் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.  தனது சகோதரி தேர்தலில் போட்டியிட உள்ளதால் அந்த பட்டத்தை நானே முன்வந்து துறந்தேன் என சோனு சூட் தெரிவித்துள்ளார்.

Related Stories: