மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு ரூ.2 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது

அவனியாபுரம்: மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி போதைப்பொருளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த தனியார் விமானம் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக, மதுரை விமான நிலைய, சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இலங்கை செல்லும் பயணிகளிடம் தீவிர சோதனை நடந்தது. அப்போது மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, மண்ணெண்ணெய் அடுப்பில் கெரசின் ஊற்றும் பகுதியில் விலை உயர்ந்த போதைப்பொருளான அமிட்டமைன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது, அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கொடுத்து அனுப்பியதாக கூறினார். இதனைத்தொடர்ந்து, போதைப்பொருளை மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் உதவி ஆணையர் திருமால்ராஜ் கைப்பற்றி, ஷகில் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கைப்பற்றப்பட்ட ‘‘அமிட்டமைன்’’ என்ற போதை மருந்து 500 கிராம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி.

Related Stories: