மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் அதிகார அமைப்பில் உள்ளபணியிடங்களை நிரப்பும் பொறுப்பு டிஎன்பிஎஸ்சியிடம் ஒப்படைப்பு; சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் சேர்க்கையானது , விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒரே மாதிரியான தன்மையை கொண்டு வரும் மற்றும் அந்த பணிகளுக்கு மாநிலத்தின் கிராமப்புறங்களில் மற்றும் ஒதுக்குப்புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிப்பதை இயல செய்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் அதுபோன்ற ஆட்சேர்ப்பினை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகார அமைப்புகளில் ஏற்படும் காலியிடங்களை ஆட்சேர்ப்பதில் நிபுணத்துவத்தை பேண  முடியும். மேலும், அந்த நிறுவனங்களின் ஆள் சேர்ப்பு தொடர்பான இக்கட்டான நேரங்களில் இருந்து விடுவித்து அவர்களின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த அதிக நேரம் வழங்குகிறது.

எனவே, அரசுக்கு சொந்தமான அனைத்து அமைப்புகளிலும் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான கூடுதல் பணிகளை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 321வது பிரிவில் உள்ளபடி ஒரு சட்டத்தை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த சட்ட மசோதா, எம்எல்ஏக்களின் குரல் வாக்கெடுப்புடன் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: