சிறுபான்மையினரை அடையாளம் காண ஒன்றிய அரசுக்கு கடைசி வாய்ப்பு: உச்ச நீதிமன்றம் கடும் காட்டம்

புதுடெல்லி: மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல், விதிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட பொது நலவழக்கில் பதிலளிக்க, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி கெடு விதித்துள்ளது. வழக்கறிஞர் அஷ்வின் குமார் உபாத்யாய் தரப்பில் வழக்கறிஞர் அஷ்வின் குமார் துபே தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நாடு முழுவதும் பெரும்பான்மையினராக கருதப்படும் இந்துக்கள், மிசோரம், மேகாலயா, நாகலாந்து உள்பட 10 மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், உரிமைகள் கிடைப்பதில்லை.

எனவே, மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை வகுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட  வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டும், ஒன்றிய அரசு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த மனு நீதிபதிகள் எஸ்கே. கவுல், எம்எம். சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதற்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தரும்படி கோரினார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‘மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். இதுவே ஒன்றிய அரசுக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பு,’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர்கள், பார்சிகள் உள்ளிட்ட 5 சமூகத்தினரையும் சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளும் இத்துடன் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: