இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு: விரைவில் விசாரணை

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பப்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கே.கே.ரமேஷ் என்பரின் சார்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மீதமுள்ளவர்களையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்கள், அவர்களின் படகு உள்ளிட்ட உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை வரும் சில நாட்களில் பட்டியலிடப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: