எஞ்சிய மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 3வது நாளாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது சீர்காழி தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்க முன்வருமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டு உள்ளது.

இவற்றில் 2021-22ம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கப்பட உள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரி இல்லாத மயிலாடுதுறை உள்பட எஞ்சிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்,’ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதமொன்றுக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். இதன் விலையை குறைக்க அரசு ஆவன செய்யுமா’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: ஒன்றிய அரசால் மாநிலத்துக்கு வழங்கப்படும் பொது வினியோக திட்ட மண்ணெண்ணெய் சமைப்பதற்கும் மின்சார தட்டுப்பாடு உள்ள மலைப் பிரதேசங்களில் விளக்கு எரிக்கவும் வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசால் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 7536 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீடானது, தற்போதைய வழங்கல் அளவின்படி மாதாந்திர தேவைக்கு 19 சதவீதமாகும். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரரின் வசிப்பிடத்துக்கு ஏற்பவும் காஸ் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் விற்பனை முனைய விலை, ஒன்றிய அரசின் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வாயிலாக மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் விலை, மாநில அரசின் உணவு மானியத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. எனினும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் குறைந்தபட்சமாக ரூ16.50 முதல் அதிகபட்சமாக ரூ18 வரை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

எம்எல்ஏக்கள் கேள்வி: முதல்வர் பதில்

தமிழக சட்டப்பேரவை கடந்த புதன்கிழமை துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம்  என்பதால், துவக்க நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்தார். அவர் படித்து முடித்ததும் சட்டப்பேரவை நிறைவு பெற்றது. 2-வது நாளான நேற்று கவர்னரின் உரை மீதான விவாதத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசினர். 3-வது நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இதற்காக அவர் காலை சட்டப்பேரவைக்கு வந்தபோது, உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

Related Stories: