ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி சாலையில் தனியார் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி சாலையில் தனியார் வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு குறுகலாக இருந்த ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் சாலைகள் கடந்த 2019ம் ஆண்டு அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.

தற்போது, ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி சாலையின் இருபுறமும் இரவு நேரத்தில் தொழிற்சாலை பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வழியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ், கார் மற்றும் கனரக வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி சாலை வழியாக சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் காந்தி சாலை, தேரடி தெரு ஆகியவை ஸ்ரீபெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த சாலையின் இருபுறமும் தனியார் தொழிற்சாலைகளின் பஸ்கள் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இரவில் எதிர் திசையில் வரும் பைக், கார் போன்ற வாகன ஓட்டிகள் மரண பயத்தில் சாலையை கடந்து செல்கின்றனர். அடிக்கடி விபத்தும் நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி சாலையை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படும் வாகன டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: