பிரதமர் பாதுகாப்பு குறைபாடு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டிருக்கும் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா விமான நிலையம் சென்று, அங்கிருந்து ஹூசைனிவாலாவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள திட்டமிருந்தார்.   மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, மாற்று பயண திட்டத்தின்படி பிரதமர் சாலை மார்க்கமாக 100 கி.மீ. கார் மூலம் செல்ல திட்டமிடப்பட்டு, மாநில காவல் உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்படி சுமார் 80 கி.மீ. பயணம் செய்த நிலையில், பிரதமரின் வழித்தடத்தில் நின்றிருந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பிரதமர், மேம்பாலம் ஒன்றில்  காரில் காத்திருக்கும் புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும், இணையங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்  மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில், தனது பயண திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பதிண்டாவிற்கு திரும்பினார். இந்த பாதுகாப்பு குளறுபடி தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் என்ற பதவிக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: