பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துணைவேந்தர்களை மாநில முதலமைச்சரே நியமனம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும், என சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு முதல்வர் பதில் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. மாநிலத்தின் ஆளுநராக இருப்பவரே, மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார். பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராகத் துணைவேந்தர் இருப்பார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை மாநில அரசு அமைக்கும். இந்த குழு பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஆளுநருக்குப் பெயரைப் பரிசீலனை செய்யும். ஆளுநர் இந்தப் பெயரைக் கலந்தாலோசித்து நியமனம் செய்வார்.

இந்த நியமனம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில ஆளுநரே நேரடியாக நியமிப்பதற்கு பதிலாக, மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களில் இருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மசோதாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பாக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories: