கொக்கிரகுளத்தில் பாலம் அமைக்க குவிக்கப்பட்டது தாமிரபரணியில் நீரோட்டத்திற்கு தடையாக செயற்கை மணல் திட்டுகள்

நெல்லை:  நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் குடிநீர் குழாய்களுக்காக பாலம் கட்டும்போது ஆற்றில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை தடை மணல் திட்டுகள் அகற்றப்படாததால் அப்பகுதியில் நீரோடத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. குறுகிய பகுதியில் அதிவேகமாக நீர் சுழன்று  பாய்வதால் குளிப்பவர்களுக்கு அபாய பகுதியாக மாறிவருகிறது.நெல்லை மாநகரில் அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீர் திட்டப்பணிநடந்து வருகிறது. இதற்காக மாநகரில் பெரிய மற்றும் சிறிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சந்திப்பு பகுதியில் இருந்து பாளை பகுதிக்கு கனரக குழாய்களை அமைப்பதற்காக கொக்கிரகுளத்தில் உள்ள இரு ஆற்றுப்பாலங்கள் அருகே குடிநீர் குழாய்க்கான சிறிய பாலம் அமைக்கப்பட்டது.

இதற்காக ஆற்றின் மையப்பகுதிகளில் தூண்கள் அமைப்பதற்காக ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பி விடப்பட்டது. இப்பாலம் அமைப்பதற்கு முன்னதாக இதன் அருகே புதிய பாலம் அமைக்கும் போதும் ஆற்றின் மையப்பகுதிகளில் மணல் குவித்து நீரின் போக்கு மாற்றி விடப்பட்டது. தற்போது இந்தப்பால பணிகள் முடிந்து விட்டன. ஆயினும் மையப்பகுதியில் கொட்டப்பட்ட மணல் பகுதிகளில் தற்போது மணல் திட்டுகளாக மாறிவிட்டன.

இதனால் இந்த இடத்தில் நீரோட்டம் சீராக செல்வதில் தடைஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பாதை இடைவெளியில் நீர் பாய்ந்து செல்வதால் அப்பகுதியில் நீரோட்ட வேகம் அதிகமாகவும் சுழலும் ஏற்படுகிறது. இதனால் இந்தப்பகுதியில் குளிக்க செல்பவர்களுக்கு இது அபாய பகுதியாக மாறிவருகிறது. இந்தப்பகுதியில் ஏற்கனவே பலர் மூழ்கி இறந்த நிகழ்வும் நடந்துள்ளது. எனவே பாலங்களுக்கு கீழ் உள்ள இந்த மணல் திட்டுகளை முழுமையாக அகற்றி முன்னர் போல் தடையின்றி நீர் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: