ரூ.3.10 கோடி மோசடி வழக்கில் 20 நாட்களாக தலைமறைவு கர்நாடகாவில் பதுங்கியிருந்த மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது: தப்ப முயன்றவரை தனிப்படை போலீசார் விரட்டி பிடித்தனர்

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்த வழக்கில், கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் விரட்டி பிடித்து கைது செய்தனர். இவரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன், தனது உறவினருக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலைக்காக, ரூ.30 லட்சத்தை முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் தம்பி விஜய நல்லதம்பியிடம் அளித்ததாக குற்றப்பிரிவு போலீசில் கடந்த நவ. 15ல் புகார் அளித்தார். போலீசார், விஜயநல்லதம்பியை பிடித்தனர். விசாரணையில், ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரின் 3 உதவியாளர்களிடம் ரூ.1.60 கோடியை தந்ததாகவும், சாத்தூரில் அதிமுக தொண்டர்களை கூட்டிய செலவினமாக ரூ.1.50 கோடியை, ராஜேந்திரபாலாஜி திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும்  தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், ரூ.3.10 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள் 3 பேர் மீது, 5 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, கடந்த டிச. 17ல் காலை 10.40 மணிக்கு தள்ளுபடியானது. அப்போது விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்ட மேடையில் ராஜேந்திரபாலாஜி காலை 11.10 மணி வரை இருந்தார். மேடையை விட்டு இறங்கும்போது முன்ஜாமீன் மனு தள்ளுபடி தகவல் அறிந்து வேக, வேகமாக காரில் ஏறி தலைமறைவானார்.

தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை பிடிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. சென்னை, டெல்லி, கோவை, கேரளா, கிருஷ்ணகிரி, தர்மபுரி என ஒவ்வொரு பகுதியாக ராஜேந்திரபாலாஜி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் தேடி வந்தனர். ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள், கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் 600 பேரின் செல்போன் எண்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தனர். வெளிநாடுகளுக்கு தப்பாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு (தேடப்படும் குற்றவாளி) லுக் அவுட் நோட்டீஸ்  வழங்கப்பட்டது. கடல் வழியாக தப்பி செல்லாமல் இருக்க கடலோர கண்காணிப்பும் செய்யப்பட்டது. வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டன.

ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்பட்ட திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை, தர்மபுரி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பொன்னுவேல், கார் டிரைவர் ஆறுமுகம் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை செய்தனர். இதற்கிடையில் இணையதளம் மற்றும் மாவட்ட எஸ்பி மனோகரிடம் புகார் அளித்த 7 பேர், முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜி உதவியாளர் சீனிவாசன், அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராஜசிம்மன் மற்றும் இருவரிடம் தென் மண்டல ஐஜி அன்பு, மதுரை சரக டிஜஜி காமினி, எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்காமல் இருந்தன.

இதற்கிடையில், பலமுறை தனிப்படை போலீசார் ராஜேந்திரபாலாஜியை நெருங்கியபோது, அவர் தகவல் அறிந்து இடத்தை மாற்றி உள்ளார். இதனால் தனிப்படையில் உள்ள போலீசார் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. எனவே, தனிப்படை மாற்றி அமைக்கப்பட்டது. தனிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியை தவிர்த்து 4 போலீசாரை மாற்றி,  ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 போலீசார் என மாற்றி அமைக்கப்பட்டது. அப்போதும் தகவல் கசிந்துள்ளது. அதில் ஒரு  நபர் சிவகாசியில் வேலை செய்த நபராக இருந்து தனது விசுவாசத்தை காட்டியது  தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை மாற்றிய பிறகே தனிப்படையின் மூவ்  பற்றிய தகவல் கிடைக்காமல் ராஜேந்திரபாலாஜி தவித்துள்ளார்.

இதனால், ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும் பொறுப்பு, மேற்கு மண்டல ஐஜி சுதாகரிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் இருந்து தப்பி கேரளா மாநிலம் பாலக்காடு சென்றுள்ளார். அங்கிருந்து, ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திரா சென்றுள்ளார். ஆந்திராவில் அவரை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் ஆந்திராவில் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் ஓசூர் வந்தார். இவர் அடிக்கடி கார்களை மாற்றியதோடு, செல்போனையும் தினமும் மாற்றி வந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பேசி வந்தார். அதை வைத்து விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

மேலும் அவர் கடைசியாக ஓசூரில் இருந்துள்ளார் என்று ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஓசூரில் அவருக்கு உதவி செய்தது யார்? என்று விசாரித்தபோது ஜல்லி வியாபாரம் செய்யும் பாஜகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்று தெரியவந்தது. இதனால் அவரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர். இருவரையும் கண்காணித்தபோது ஓசூரில் இருந்து பெங்களூரு சென்றது தெரியவந்தது. எனவே, டோல்கேட்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தனிப்படையினர் கண்காணித்து வந்துள்ளனர். பல நேரங்களில் காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்து சென்றுள்ளார். மேலும், ராஜேந்திரபாலாஜி பயன்படுத்திய கார், டோல்கேட் வழியாக செல்லும்போது பாஸ்ட் டேக்கிற்கு பணம் செலுத்திய விவரத்தின் வழியாக, பெங்களுரில் உள்ள பாஸ்ட் டேக் தலைமையிடம் மூலம் தனிப்படையினர் தகவல் பெற்றுள்ளனர்.

கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது அவர் சென்ற காரையும் கண்டுபிடித்தனர். மேலும், வழக்கறிஞரிடம் பேசிய தகவல்களை வைத்து அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பதுங்கியிருப்பது உறுதியானது. நேற்று பெங்களூரில் இருந்து மங்களூர் வழியாக கேரளாவிற்குள் செல்ல திட்டமிட்டிருந்தார். இதனால் போலீசார் பெங்களூர் சென்றபோது அங்கிருந்து தப்பியிருந்தார். இதனால் மங்களூருக்குத்தான் வந்தாகவேண்டும் என்பதால் அங்கு காத்திருந்தனர். ஆனால் வரவில்லை. இதனால் மங்களுருக்கும் ஹாசன்கோடுக்கும் இடையில்தான் அவர் இருக்க வேண்டும் என்று தெரிந்து ஹாசன்கோடில் போலீசார் அவர் சென்ற வாகனத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஹாசன் கோடு டோல்கேட் அருகில் தனிப்படை போலீசார் அவரது காரை மடக்கினர். ஆனால் அவர் போலீசாரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றார்.

சுதாரித்துக்கொண்ட போலீசார் ராஜேந்திரபாலாஜியை விரட்டிச்சென்று பிடித்தனர். அப்போது அவர் டீ சர்ட், காவி வேட்டியில் இருந்தார். அவருடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது டிரைவர் நாகேஷ், உதவியாளர் ரமேஷ், விருதுநகர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாண்டியராஜன் ஆகியோரும் இருந்தனர். அனைவரையும் விருதுநகர் மாவட்டம் அழைத்து வருகின்றனர். இரவு 1 மணிக்கு விருதுநகர் வந்து சேரும் ராஜேந்திரபாலாஜியிடம் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாக பெற்று, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது. 20 நாள் தலைமறைவுக்குப்பின் அவர் சிக்கியுள்ளார்.

ராஜேந்திரபாலாஜியை பிடித்தபோது உடனிருந்த 4 பேர் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பாஜ மாவட்ட தலைவர் உட்பட 4 பேர் என 8 பேரையும் விசாரணைக்கு அழைத்து வருகின்றனர்.

* 4 பேர் தலைமறைவு

ரூ.3.10 கோடி மோசடி வழக்கில் விஜயநல்லதம்பி, ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். ராஜேந்திரபாலாஜி சிக்கிய நிலையில் தலைமறைவாக உள்ள 4 பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என தனிப்படையினர் தெரிவித்தனர்.

* அடைக்கலம் கொடுத்த கிருஷ்ணகிரி பாஜ நிர்வாகிகள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள் சிலர், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுக்க தயக்கம் காட்டியுள்ளனர். இதையடுத்து பாஜவின் கர்நாடக தலைவர் ஒருவரிடம் அவர் உதவி கேட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஹசன் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை தங்க வைத்து, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் முழுமையான விபரங்கள், முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

* திருவில்லிபுத்தூரில் பலத்த பாதுகாப்பு

கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். எம்எல்ஏ, அமைச்சர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2ல் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அதிமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரலாம் என்பதால், டிஎஸ்பி சபரிநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: