அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எப்படி இருந்தது என்பதற்கு கோடநாடு கொலை கொள்ளையே சாட்சி!: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எப்படி இருந்தது என்பதற்கு கோடநாடு கொலை கொள்ளையே சாட்சி என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசுப்பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும். கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு ஊக்கத்தினை அளிக்கும் திட்டங்கள் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க ஆளுநர் உரை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பொய் உரைகளை கூறி சென்றிருக்கிறார் என்று தெரிவித்தார். குட்கா என்ற பொருளை பிரபலப்படுத்திய அதிமுக ஆட்சிக்காரர்கள் போதைப்பொருள் தடுப்பு பற்றி குறை கூறுகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பற்றி எடப்பாடி மறந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், அதிமுக ஆட்சியில் குற்றம் செய்தவர்களை எல்லாம் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார்கள் ஆட்சியாளர்கள் என்று சாடினார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு  மூலம் சட்டம், ஒழுங்கு சீரழிவை தூக்கிப்பிடித்த அதிமுகவினர் இன்று சட்டம், ஒழுங்கை பற்றி பேசுகிறார்கள் என்று தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார். எடப்பாடி ஆட்சியில் தான் டிஜிபியை செயல்படவிடாமல் சிறப்பு டிஜிபி என்ற பதவி உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசிடம் இருந்து தேசிய பேரிடர் நிவாரணம் பெறுவதில் எடப்பாடி அரசு தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டார். மேலும் மழை, வெள்ள பாதிப்புகளை பற்றி அதிமுகவினர் பேசுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் பெருமழை பெய்த போது திருச்சியில் இருந்த முதலமைச்சர் இரவோடு இரவாக நேரில் வந்து ஆய்வு செய்தார் என்று கூறினார். பொங்கலுக்கு எடப்பாடி ஆட்சியில் அனைத்து ஆண்டுகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அமைச்சர், தேர்தலுக்காகவே கடந்த 2 ஆண்டுகள் பொங்கல் பரிசு வழங்கினர் என்று கூறினார். தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, அம்மா கிளீனிக்குகள் பெயர்களில் மட்டுமே தொடங்கப்பட்டிருந்தன. மருத்துவர்களோ, செவிலியர்களோ நியமிக்கப்படாததால் தான் அம்மா கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அரசியல் காழ்புணர்ச்சியால் அம்மா கிளீனிக்குகளை மூடவில்லை என்று தெரிவித்தார். மேலும் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்குவதை சுட்டிக்காட்டி தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். முறைகேடாக கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி பொய் உரைகளை மக்கள் நிராகரிப்பார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எப்படி இருந்தது என்பதற்கு கோடநாடு கொலை கொள்ளையே சாட்சி என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்துவிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம், துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கல்வி நிலையங்கள் அருகே போதை பொருட்கள் புழக்கம் உள்ளது என்று குறிப்பிட்டார். பொங்கல் பரிசு தொகையை கூட மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய பழனிசாமி, சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடியுள்ளது என்று கூறினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: