300 கட்டண டிக்கெட் என கூறி 25 ஆயிரம் மோசடி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி டிக்கெட்டுகள் விற்பனை: அதிரடிப்படை போலீஸ் உட்பட 7 பேர் கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி டிக்கெட்டுகள் விற்றதாக அதிரடிப்படை போலீஸ்காரர் உள்பட 7 பேரை விஜிலன்ஸ் போலீசார் கைது செய்தனர்.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆங்கில புத்தாண்டு தினத்தில் தெலங்கானாவை சேர்ந்த 4 பக்தர்கள் வந்தனர். அவர்கள் கொடுத்த 300 மதிப்புள்ள டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் ஸ்கேன் செய்தபோது போலியானது என தெரிந்தது. உடனே திருமலை முதலாவது போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதே நாளில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 3 பக்தர்களும் போலி டிக்கெட்டுடன் தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை திருமலை 2வது போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தேவஸ்தான விஜிலன்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில், 7 பக்தர்களிடம் இருந்து திருப்பதியில் சிலர் ₹300 தரிசன டிக்கெட்டை ரூ.3 ஆயிரம் என ரூ.25 ஆயிரம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக போலி டிக்கெட் விற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், போலி டிக்கெட் விற்றவர்கள் திருப்பதியை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை காவலர் கிருஷ்ணாராவ், லட்டு கவுன்டர் ஒப்பந்த ஊழியர் அருண், இடைத்தரகர்கள் பாலாஜி, ெசங்காரெட்டி, முன்னாள் டிக்கெட் கவுன்டர் ஏஜென்சி ஊழியர் நாகேந்திரா, தேவேந்திர பிரசாத், வெங்கட் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து 7 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

‘இடைத்தரகர்களை நம்பாதீர்...’

திருப்பதி தேவஸ்தானம் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். இடைத்தரகர் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். பக்தர்களை ஏமாற்றி அதிக விலைக்கு டிக்கெட் விற்பவர்கள் மீதும், போலி டிக்கெட்டு விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.

Related Stories: