புத்தாண்டு அன்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்த முடியாண்டி(34) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த ஜனவரி 1-ம் தேதி சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டியில் வழிவிடு முருகன் என்பவரது பட்டாசு ஆலையில் அதிகளவு ஃபேன்சி ரக பட்டாசு தயாரிக்க மருந்து தயார் செய்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமானது. சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து என தகவல் வெளியானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பட்டாசு மூலப்பொருட்கள் கலக்கும் போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முடியாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்து நிகழ்ந்த அன்றே உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: