ரிட்டர்ன் ஆன நிவாரண செக் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் போலீசில் புகார்

சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான செக் ரிட்டன் ஆனதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் நேற்று புகார் தெரிவித்தனர்.சிவகாசி அருகே ரிசர்வ்லயன் சிலோன் காலனியில் ராமநாதன்(44) என்பவருக்கு சொந்தமான பட்டாசு பேப்பர் குழாய் கம்பெனியில் கடந்த ஆண்டு நவ.15ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துகொண்டிருந்த நேருஜிநகரை சேர்ந்த வேல்முருகன்(37), சிலோன் காலனியை சேர்ந்த மனோஜ்குமார்(23) படுகாயம் அடைந்தனர். வேல்முருகனின் மனைவி கார்த்தீஸ்வரி(33), திருப்பதி நகரை சேர்ந்த சலீம் மனைவி ஹமீதா(55) ஆகியோர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்த 2 பெண்கள் குடும்பத்திற்கு கட்டிட உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம் 10 லட்சத்திற்கு நிவாரணத்தொகையாக செக் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிச.13ம் தேதியிட்டு இந்த செக் வழங்கப்பட்டது. இந்த செக்கை சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று பணம் எடுக்க முயன்ற போது, செக் செல்லாது என வங்கியில் தெரிவித்துள்ளனனர். இதனால் ஏமாற்றம் அடைந்த குடும்பத்தினர் சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார், ராமநாதன் அவரது மனைவி பஞ்சவர்ணம் தலைமறைவாக உள்ளதால் அவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டனர். அப்போது, 2021 டிச.20ல் வேறு செக் வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் சொன்னபடி புதிய செக் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று மீண்டும் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் சுபகுமாரிடம் புகார் தெரிவித்தனர். அவர், சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு விரைவில் பணம் பெற்று தருவதாக உறுதி கொடுத்த பின்னர் கலைந்து சென்றனர்.

பட்டாசு குழாய் கம்பெனியில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியாகினர். இந்த பட்டாசு குடோன் உரிமையாளர் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தலைமைறைவாகவே உள்ளார். இதனால் நிவாரணத்தொகை பெறுவதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: