கொரோனா டெஸ்ட் எடுத்தால் மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதி: சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரிசோதனை எடுத்திருந்தால் மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நாளை (புதன்) தொடங்குவதையொட்டி, சட்டப்பேரவை கூட்டம் நடக்க இருக்கும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பணிகளை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருவதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டம் எப்படி நடந்ததோ அதைபோல் இந்த ஆண்டும் ஆரம்பித்து இருக்கிறோம். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் கூட்டத்தை நடத்துவோம். பேரவைக்கு வருபவர்கள் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். மேலும், தற்போதைய கொரோனா பரிசோதனை எடுத்து இருக்க வேண்டும். அப்போது தான் சட்டப்பேரவைக்குள் நுழைய அடையாள அட்டை வழங்குவோம். கடந்த ஆண்டை போல் காகிதம் இல்லாத பட்ஜெட் இந்த ஆண்டும் தொடரும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அவையை நடத்த நல்ல ஒத்துழைப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தருவார்கள்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் முதல்வர், எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தன்னுடைய உறுப்பினர்களை பேச வைக்கிறார். கவர்னரை நாங்கள் சந்தித்தபோது கூட கவர்னர் எங்களிடம், முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், அதற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவராகவும் இருக்கிறார் என்றும் அதிசக்தி வாய்ந்த முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். ஏனென்றால் முதலமைச்சரின் நடவடிக்கைகளை அவர் பார்க்கிறார். இதுக்கு மேல் கவர்னர்-முதலமைச்சர் உறவுக்கு வேறு என்ன வேண்டும்.  சட்டத்திற்கு உட்பட்டு, ஜனநாயக முறைபடி சட்டப்பேரவை நடக்கும். பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உடன் இருந்தார்.

* பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறுவதையொட்டி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று பேரவை கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், போலீசார், கலைவாணர் அரங்கத்தில் பணியாற்றுபவர்கள் என சுமார் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 65 பத்திரிகையாளர்கள், தலைமை செயலாக ஊழியர்களுக்கு டெஸ்ட் எடுத்ததில் மட்டும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது கூட இத்தனை பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததில்லை.

இதேபோன்று தலைமை செயலக ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. மேலும் போலீசார், உயர் அதிகாரிகளின் விவரம் தெரியவில்லை. நேற்றும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கும் தலைமை செயலகம் மற்றும் கலைவாணர் அரங்கில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று தெரியவரும். மேலும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் அவரவர்கள் இருக்கும் இடங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும். இதில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: