இந்திய கடல் எல்லையை கண்காணிக்க நாகை கலங்கரை விளக்கத்தில் 2 ரேடார்கள் பொருத்தும் பணி தீவிரம்: 55 கி.மீ. சுற்றளவு வரை துல்லியமாக பார்க்க முடியும்

நாகை: இந்திய கடல் எல்லையை கண்காணிக்க நாகை கலங்கரை விளக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 2 ரேடார்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தஞ்சையை தலைநகரமாக கொண்டு சோழமன்னர்கள் ஆட்சி காலம் முதல் நாகை துறைமுகத்துக்கு என்று தனி சிறப்பு உள்ளது. சென்னை, மகாபலிபுரம், கடலூர், நாகை, கோடியக்கரை, மல்லிப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, மணப்பாடு, தொண்டி உள்ளிட்ட 25 இடங்களில் கடலில் செல்லும் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் இருக்கும் இடங்களை குறிப்பிட கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் நாகை கலங்கரை விளக்கம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. இந்திய அரசால் நாகையில் 1985ம் ஆண்டு 48 மீட்டர் உயரமுடைய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வங்க கடலின் அழகையும், நாகை நகரத்தின் அழகு, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரத்தை பார்வையிட்டு ரசிக்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாகை கலங்கரை விளக்கத்தில் இந்தியாவின் கடலோர எல்லையை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 2 ரேடார்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த ரேடார் கருவி ரூ.2.5 கோடி மதிப்புள்ளது. இந்த ரேடார் கருவியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மட்டும் ரூ.1 கோடி மதிப்பானது. ரேடாரில் உள்ள கேமரா 55 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் எல்லை பரப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளை தெளிவாக படம் பிடித்து உடனுக்குடன் பதிவு செய்யும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இதனால் நாகை கலங்கரையில் இருந்து 55 கிலோ மீட்டர் சுற்றளவில் அந்நிய நாட்டு கப்பல் வந்து சென்றால் எளிதாக அடையாளம் காண முடியும்.

அதேபோல் நமது நாட்டு மீனவர்கள், மீன் பிடிக்க சென்று கரை திரும்பும்போது ஏதாவது பிரச்னை இருந்தால் உடனே தகவல் தெரிந்து அந்த படகு நிற்கும் இடத்தை கண்டுபிடித்து மீட்க முடியும். இந்திய வானிலையை துல்லியமாக கணித்து உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ள முடியும். இதுகுறித்து நாகை கலங்கரை விளக்க நிலைய அதிகாரி சின்னசாமி கூறியதாவது: நாகை கலங்கரை வளாகத்தில் இந்திய கடலோர காவல் படை, கடலோர காவல் குழுமம் இணைந்து ரூ.2.5 கோடியில் ரேடார் அமைத்து வருகிறது.

இதற்காக முதல்கட்டமாக ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட அறைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது 58 அடி உயரம் கொண்ட டவர் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணி நிறைவடைந்தவுடன் அதன்மேல் அதிநவீன தொழில்நுட்ப ரேடார் அமைக்கப்படும். அதில் மிக வேகமாக செயல்படும் கேமரா பொருத்தப்படும். இந்த கேமரா மட்டும் ரூ.1 கோடியாகும். இந்த மாத இறுதியில் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு நாகை கலங்கரை விளக்கத்திலிருந்து 55 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்திய நாட்டின் கடல் எல்லையை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

இயற்கை சீற்றங்கள், நமது நாட்டு மீனவர்கள் பாதுகாப்பு, நமது நாட்டின் கடல் எல்லையில் அந்நிய நாட்டு படகு அல்லது கப்பல் ஊடுருவலை தெளிவாக படம் பிடித்து அனுப்பி விடும். இதில் பதிவாகும் தொகுப்புகளை கண்காணிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்கள் 24 மணி நேரமும் கேமராவில் பதிவாகும் பதிவுகளை பார்த்து சந்தேகம் ஏற்பட்டால் இந்திய கடல் படைக்கு தகவல் தெரிவிப்பர். கண்காணிப்பு பணியில் 8 மணி நேரத்துக்கு ஒருவர் நியமிக்கப்படுவர் என்றார்.

Related Stories: