டிஜிபி சைலேந்திர பாபு தகவல் ஆபரேஷன் ரவுடி வேட்டை 3,325 பேர் அதிரடி கைது

சென்னை: தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ஆபரேஷன் ரவுடி வேட்டை நடவடிக்கையால்  3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  தெரிவித்துள்ளார். இது குறித்து டிஜிபி வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல்துறை கடந்த 2021ம் ஆண்டில் பல்வேறு சாவல்களை சந்தித்துள்ளது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் நினைவுநாள், மதுரை தேர் திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அமைதியாக நடத்தப்பட்டன. அதேபோல் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட்டு, குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டது.

தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த சாதிய கொலைகள் மற்றும் வடதமிழகத்தில் நடைபெற்றுவந்த ரவுடிகளுக்கிடையேயான பழிவாங்கும் கொலைகளைத் தடுக்க ‘‘ஆபரேஷன் ரவுடி வேட்டை’’ நடவடிக்கை எடுக்கப்பட்டு 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த, 1,117 பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் 23 டன் கஞ்சா மற்றும் 20 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா 2ம் அலையினால், பணியில் இருந்த 139 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

கடந்த 2021ம் ஆண்டில் வாரிசுகள் 1,500 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் காவலர்கள் பணியாளர்கள் 1,067 பேருக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் 989 எஸ்.ஐ மற்றும் 10 ஆயிரம் கான்ஸ்டபிள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையால் நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறையை குறைத்தல், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடைபெற்று வரும் போதைப் பொருட்களின் பயன்பாடு, குற்றங்களுக்கு எதிரான சமரசமில்லாத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நடப்பு ஆண்டில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அமைதியான வாழ்வு மேற்கொள்வதை காவல்துறை உறுதி செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: