நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 10 கோடி சிறார்களுக்கு நாளை முதல் தடுப்பூசி.! நேற்றிரவு வரை ஒரே நாளில் 3.15 லட்சம் பேர் முன்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 10 கோடி சிறார்களுக்கு நாளை முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது. நேற்றிரவு வரை ஒரே நாளில் 3.15 லட்சம் சிறார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய ேகாவிஷீல்டு தடுப்பூசி, ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசி ஆகிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. மேலும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது.

இதுவரை 145 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில், ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முதியோர், சிறார்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு நாளை முதல் (ஜன. 3) கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படும்; வரும் 10ம் தேதி முதல் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,  முதியோர் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி எனப்படும் முன்னெச்சரிக்கை  தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 25ம் தேதி அறிவித்தார். சிறார் தடுப்பூசிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ‘கோவின்’ செயலி மற்றும் இணையத்தில் சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்த மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆதார் மற்றும் இதர தேசிய அடையாள அட்டைகள் மட்டுமில்லாமல், மாணவர்களின் பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தியும் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றிரவு 11.30 மணி வரை ஒன்றிய அரசின் ‘கோவின் டாஷ்போர்டில்’ உள்ள தரவுகளின்படி 3,15,416 சிறார்களுக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள்படி 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் 10 கோடி பேர் இருப்பதால், அவர்களுக்கான தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி போடப்படும் என்றும், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் சில இடங்களில் மூடப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட சிறார்களின் வீட்டிற்கு நேரடியாக ெசன்று தடுப்பூசி போட தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன. சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை வரவழைத்து தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது.

Related Stories: