கொரோனா பரவலால் ஆழியார் அணை பூங்கா, கவியருவி வெறிச்சோடியது

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை பூங்கா, வால்பாறை சாலையில் உள்ள கவியருவிக்கும் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி விஷேச நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாதமாக ஆழியார் அணைப்பகுதி மற்றும் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பின், செப்டம்பர் மாதம் முதல், மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வாரமாக பள்ளி விடுமுறையால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள்  என்பதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் பூங்கா மற்றும் கவியருவி 2 நாட்களும் மூடப்பட்டது. நேற்று புத்தாண்டையொட்டி, சில பயணிகள் குரங்கு அருவியில் குளிக்க வந்தனர். ஆனால் வனத்துறையினர், அவர்களை அறிவுத்திருக்கோவில் அருகே உள்ள சோதனை சாவடியிலிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரமாக சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்ட கவியருவியானது,

நேற்று தடை காரணமாக வெறிச்சோடியது.  தடையை மீறி செல்வதை தடுக்க, தடுப்புகள் வைத்து, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதுபோல், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும், ஆழியார் பூங்கா மற்றும் அணைப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது. இருப்பனும், பூங்கா அருகே போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: