டெல்டா கொரோனா போல் பரவத் தொடங்கியதா ஒமிக்ரான்?... ஒன்றிய அரசு விளக்கம்..!

டெல்லி: டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான் வைரஸ் இன்று 120க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3.30 லட்சம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 59 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 2ம் தேதி கர்நாடகாவில் முதல் முதலாக இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 14ம் தேதி வரை ஒமிக்ரான்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது.

அதன்பின் படிப்படியாக உயர்ந்து இன்றைய நிலையில் 1,200க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களில் 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 28 நாட்களில் ஒமிக்ரானின் மொத்த பாதிப்பு எண்ணிக்ைக 1,270 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 450 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 198 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், சிக்கிம், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய 8 மாநிலங்களில் இதுவரை ஒருவருக்கு கூட  பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த 52 வயதுடைய ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். உலகளவில் ஒமிக்ரான் பாதிப்பால் 59 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இந்தியாவிலும் முதன் முதலாக ஒருவர் ஒமிக்ரானால் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா வைரஸ் பரவியதைப் போல ஒமிக்ரான் பரவும் நிலையை எட்டி உள்ளது.

இந்தியாவில் பரவியிருந்த உருமாறிய டெல்டா கொரோனா வைரஸின் இடத்தை உருமாறிய ஒமிக்ரான் பிடிக்கத் தொடங்கியது. ஒமிக்ரான் தொற்று பரவல் நிலையை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: