ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், தானியங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை?: லக்னோ ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள் ஆய்வு

செய்துங்கநல்லூர்: மத்திய தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல்கட்ட  அகழாய்வு பணிகள் கடந்த அக்.10ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் 3 இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் 200 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சுண்ணாம்பு தளம், 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால வாழ்விடப் பகுதிகள், மூன்றடுக்கு முதுமக்கள் தாழிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பல்வேறு துறை சார்ந்த ஆய்வாளர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் லக்னோவில் உள்ள பீர்பால் தொல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூர் வந்தனர். இந்த குழுவில் வெப்ப உமிழ்வு கால கணிப்பு ஆய்வாளர் மொர்தக்காய், ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றடுக்கு முதுமக்கள் தாழிகளைச் சேகரித்து அவை எந்த கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது, எப்போது புதைக்கப்பட்டது என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டார். அதற்கான பொருட்களை சேகரித்தார். அதேபோல் லக்னோ ஆய்வக மகரந்த தூள் ஆய்வாளர் அஞ்சலி திரிவேதி, முதுமக்கள் தாழியினுள் இருந்த பொருட்களைச் சேகரித்து, அதிலுள்ள தாவரங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்கிறார். முதுமக்கள் தாழியினுள் கிடைக்கும் தானியங்களைச் சேகரித்து அதிலிருக்கும் மகரந்தத் தூள் மூலம் அதன் காலத்தை அறிய முடியும் என்றார். அவருடன் ஆய்வு மாணவி பிரியங்கா உடனிருந்தார்.

Related Stories: