ஜவுளி துறைக்கான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் எதிர்ப்பு

டெல்லி: ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் இன்னும் ஒரு மாதத்தில் சமர்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக அரசு சார்பில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜவுளி ரகங்களுக்கான  ஜிஎஸ்டி வரியை 5%- லிருந்து 12% ஆக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி துறையை சார்ந்த சிறு, குறு தொழில் துறையினர்  ஜிஎஸ்டி வரி உயர்வால் மேலும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய  ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டு பற்றாக்குறை தொகையான ரூ. 16,725 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கி அவற்றை விரைந்து நிறைவேற்ற உதவ வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். எஃகு, தாமிரம், அலுமினியம், பித்தளை, பருத்தி, நூல் ஆகியவற்றிற்கான மூலப்பொருட்களின் விலையுயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.        

Related Stories: