கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை: நாயை வேட்டையாடியதால் பரபரப்பு-வீடியோ வைரல்

கோவை:  கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை நாயை வேட்டையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தை உலா வந்த வீடியோ வைரலாகியுள்ளது.கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசியப்பன் கோயில் வீதியில் 2 வாரத்துக்கு முன்பு சிறுத்தை ஒன்று சுற்றியது. அந்த வழியாக சென்றவர்கள் சிறுத்தையை பார்த்து பதறிப்போய் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில், அங்கே உடனடியாக கூண்டு வைக்கப்பட்டது. இரவு நேரத்தில் மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சுகுணாபுரம் பகுதியில் கல்லூரி வளாக பகுதியில் சிறுத்தை வந்து சென்றது அங்கேயிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிறுத்தை நாய் ஒன்றை கடித்து கொன்று அதை சிறிது சாப்பிட்டு போட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. இறந்து கிடந்த நாய் மற்றும் சிறுத்தை நாயை இழுத்து சென்றதால் ஏற்பட்ட ரத்தம் அங்கே கொட்டிக்கிடந்தது.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கல்லூரி வளாகத்துக்குள் சிறுத்தை உலா வந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்யக்கூடாது. சிறுவர்கள், பெண்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிறுத்தை சுற்றி கொண்டிருக்கிறது. மனிதர்களை சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது.எனவே உடனடியாக சிறுத்தையை பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 வாரமாக அறிவொளி நகர் பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிக்கிவிடும் என காத்திருக்கின்றனர். ஆனால் கூண்டு வைத்த இடத்திற்கு அதற்கு பின்னர் சிறுத்தை வரவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுகுணாபுரம், அறிவொளி நகர், போலீஸ் செக்போஸ்ட், கோவைப்புதூர் பிரிவு, மதுக்கரை காந்தி நகர் பகுதியில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் இருந்து அதிகாலை வரை இந்த சிறுத்தை ஊருக்குள் வலம் வருகிறது.

வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: