நாட்டில் வெறுப்பை பரப்பி வரும் பாஜகவின் வகுப்புவாத சிந்தனையை கடுமையாக எதிர்க்க வேண்டும்: காங். நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் பேச்சு

புதுடெல்லி: நாட்டில் வெறுப்பை பரப்பிவரும் பாஜகவின் வகுப்புவாத சிந்தனையை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் பேசினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில், காணொலி மூலம் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அப்போது கட்சியினரிடம் ஆற்றிய உரையில், ‘ஓடும் தலைவர்களை (பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்) என்னால் ஏற்க முடியாது. அவர்களின் இதயத்தில் அன்பு இல்லை.

மோடி அரசின் தவறான முடிவுகளால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். அதிகாரத்திற்காக தனது சித்தாந்தத்தை அவர் (அமரீந்தர் சிங்) மாற்றிக் கொண்டார். உண்மை இருக்கும் இடத்தில் காங்கிரஸ் இருக்கும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில், எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார். முன்னாள் பிரதமர் நேரு, யாரிடமும் வெறுப்பையும் பழிவாங்கும் போக்கையும் கடைபிடிக்கவில்லை.

மோடி அரசு நாட்டில் வெறுப்பை பரப்பி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறான நிர்வாக செயல்பாடுகளால் ஏராளமான உயிர்களை இழக்க வேண்டியிருந்தது. இதற்கு மோடி அரசு பொறுப்பேற்கவில்லை. பணமதிப்பிழப்பு, வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசின் உண்மை முகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் முன்னிலைப்படுத்த வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் மோடி அரசின் சர்வாதிகார கொள்கைகளை உறுதியாக எதிர்க்க வேண்டும்.

மோடியும், ஆர்எஸ்எஸ்-வும் உண்மையை எதிர்கொள்ள முடியாது. காங்கிரசின் பொறுப்பு என்னவென்றால், வெறுப்பை எதிர்த்துப் போராடுவதுதான். காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவின் வகுப்புவாத சிந்தனையை கடுமையாக எதிர்க்க வேண்டும். அவர்கள் மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்’ என்று பேசினார்.

Related Stories: