கறம்பக்குடி பகுதிகளில் சிதிலமடைந்த பள்ளி, அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

கறம்பக்குடி : கறம்பக்குடி பகுதியில் சிதிலமடைந்த பள்ளி, அங்கன்வாடி மைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் ராங்கியன் விடுதி ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதேபோல் வண்டான்விடுதி ஊராட்சியில் உள்ள பேயடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதுமடுமின்றி கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 2 வகுப்பறை கட்டிட சுவர்கள் மிகவும் மோசமான நிலையில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக அங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பெரிதும் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதேபோல கறம்பக்குடி பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், அங்கன்வாடி சத்துணவு மைய கட்டிடங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்கள் என்பதால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் பால்வாடி குழந்தைகள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் ஆகிய அணைத்து தரப்பினரும் பெரிதும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். உடனே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பேராபத்து நிகழும் முன், இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: