முதல் சீசனுக்காக ஊட்டி தமிழகம் மாளிகை பூங்கா தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி : முதல் சீசனுக்காக ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இச்சமயங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், இங்குள்ள பூங்காக்களை தயார் செய்வது வழக்கம்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக மே மாதத்தில் மலர் கண்காட்சி உட்பட எவ்வித விழாக்களும் நடத்தப்படவில்லை. இருப்பினும், தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

மேலும், முதல் சீசனுக்காக தற்போது அனைத்து சுற்றுலா தலங்களையும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறை ஈடுபட்டுள்ளது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்வதற்காக பாத்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நாற்று உற்பத்தியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவும் தற்போது முதல் சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

இங்குள்ள ரோஜா பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் களைகளை களைந்து பாத்திகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: