நெல்லை பட்டறைகளில் இரவு, பகலாக தயாரிப்பு பொங்கலுக்கு 8 ஆயிரம் பித்தளை பானைகள் தயார்

நெல்லை: நெல்லை அருகே பட்டறைகளில் பொங்கல் பண்டிகைக்காக 8 ஆயிரம் பித்தளை பானைகள் தயாராகி வருகின்றன. இதற்கான தயாரிப்பில் பட்டறை ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் சீர்வரிசை பொருட்களில் பித்தளை பானைகள், உருளி, ேபாணி சட்டி உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் நெல்லையை அடுத்த பழைய பேட்டை, பேட்டையில் உள்ள பட்டறைகளில் பொங்கலுக்கான பித்தளை பானைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பித்தளை ஷீட்களை வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து, துத்தநாகம், செம்பு சேர்த்து பாத்திரங்களின் தன்மைக்கேற்ப வடிவமைப்பு செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர், ஜனவரி மாதங்கள் பாத்திரப் பட்டறைகள் இரவு பகலாக இயங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு 40 பித்தளை பானைகள் வீதம் ஒவ்வொரு பட்டறையிலும் பானைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகைக்காக 8 ஆயிரம் பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு கிலோ எடை பொங்கல் பானை ரூ.750 முதல் 800 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ குத்து சட்டி என்றால் ரூ.720 முதல் 760 என விற்கப்பட உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பேட்டை, பழைய பேட்டை தவிர்த்து, டவுன், தச்சநல்லூர் பகுதிகளிலும் பாத்திர பட்டறைகள் பொங்கல் பண்டிகையை ஒட்டி விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பித்தளை பாத்திர உற்பத்தி அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பித்தளை பானைகளை பாலிஷ் செய்வதும், ஈயபூச்சு அடிப்பதும் சிரமமாக இருந்ததாக பட்டறை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மழை குறைந்து விட்ட நிலையில் வழக்கமான உற்பத்தி நடக்கிறது. பித்தளை பானைகள் பெரும்பாலும் பொங்கல் பண்டிகை காலத்திலேயே விற்பனை சூடுபிடிக்கும் நிலையில், உச்சபட்ச உற்பத்தியை எதிர்நோக்கி  தொழிலாளர்களும் காத்திருக்கின்றனர்.

பயன்பாடு குறைகிறதா?

காலமாற்றம் காரணமாக மக்கள் மத்தியில் பித்தளை பானைகளின் பயன்பாடு தற்போது குறைந்து வருகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு தண்ணீர் குடிப்பது தொடங்கி, சமையல் வரை அனைத்திலும் முன்பு பித்தளை பானைகளின் பயன்பாடு அதிகம் காணப்பட்டது. சமீபகாலமாக பித்தளை பானைகளை தேய்ப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக அதை பயன்படுத்த பெண்கள் மறுக்கின்றனர். இதன் விளைவு நெல்ைல மாவட்டத்தில் 500 பித்தளை பானைகள் பட்டறைகள் இருந்த நிலை மாறி, தற்போது 50க்கும் குறைவாகவே இயங்குகின்றன. அம்பை அருகே வாகைக்குளம் பகுதியில் குத்துவிளக்குகள் தயாரிப்பு மட்டுமே பிரதானமாக உள்ளது. பேட்டை, பழைய பேட்டையில் மட்டுமே தற்போது பொங்கல் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பித்தளை பானைகளின் பயன்பாடு மீண்டும் அதிகரித்தால் மட்டுமே, பாத்திர பட்டறை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories: