வத்திராயிருப்பு பகுதியில் களமான சாலைகளால் விபத்து அபாயம்: நெற்களம் அமைத்து தர கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் சாலைகளில் நெல்லை குவித்து மூட்டை போடுவதால் விவசாயிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வத்திராயிருப்பு மற்றும் சுற்றியுள்ள கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், பிளவக்கல் அணை மகாராஜபுரம், சேது நாராயணபுரம், புதுப்பட்டி, மாத்தூர், ரெங்கபாளையம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. தற்போது விவசாயிகள், விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். இப்பகுதியில் நெற்களங்கள் இல்லாததால் விவசாயிகள் சாலைகளை நெல்லை குவித்து மூட்டைகள் போடுகின்றனர். இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகனங்களால் விவசாயிகளுக்கு விபத்து அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து அனுப்பங்குளம் விவசாயி கோவிந்தன் கூறுகையில், ‘வத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அனுப்பங்குளம், வில்வராயன்குளம், வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம், சீவநேரி, பூரிப்பாறைக்குளம், எஸ்.கொடிக்குளம், பெத்தான்குளம், மேடாங்குளம், நத்தம்பட்டி பெரியகுளம், மாத்தூர்குளம், கோட்டையூா் குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்களங்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு முறை நெற்களங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்கவில்லை. நெற்களங்கள் இல்லாமல் சாலைகளில் சாலைகளில் நெல்லை குவித்து எடை போட வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே தற்போது உள்ள அரசு விவசாயிகள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் நெற்களங்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: