தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதபடுத்த மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.!

டெல்லி: தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுத்தியுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அம்மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநில தேர்தலை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என அலகாபாத் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார். இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் நிலவி வரும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்தார். அதில், உத்தரகாண்ட், கோவாவில் தகுதியுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் பணிகள் 100 சதவிகிதத்தை நெருங்கி விட்டது. அதேவேளை, உத்தரபிரதேசத்தில் 85 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ், மணிப்பூர் மற்றும் பஞ்சாபில் 80 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த தேர்தல் நடைபெறும் காலத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் தவிர இந்தோ-தீபெத் பாதுகாப்பு படை, எல்லைப்பதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சர்வதேச எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த பாதுகாப்பு படையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியது.

Related Stories: